செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

புகைப்படம் சுகன்.
சென்னைப் புத்தகக் கண்காட்சி

சென்னைப் புத்தக கண்காட்சி வழக்கம் போல் கவர்ச்சியாய், பிருமாண்டமாய் கண்களைப் பரவசப்படுத்தியது. இதுவரை இல்லாத அளவிற்கு நூல் விற்பனை என்று, வந்த தகவலும் கேட்க சுகமாய்தான் இருந்தது.

நடைப்பாதை பழைய நூல் கடைகளில் மக்கள் குழுமிக் கிடந்தனர். நல்ல நூல்களும் கிடைத்தன. தஞ்சை ப்ரகாஷ் கட்டுரை சென்ற ஆண்டு காவ்யா அரங்கில் 140 கொடுத்து நண்பருக்கு வாங்கிக் கொடுத்தேன். அந்தக் கட்டுரைகளை நான்தான் தொகுத்தேன் என்றாலும், வேறொருவர் தொகுத்ததாகத்தான் நூலில் இருக்கும். அதுதானே தமிழக புத்தக வியாபார சூழல். அந்த தஞ்சை ப்ரகாஷ் கட்டுரைத் தொகுப்பு ஐம்பது ரூபாய்க்கு கிடைத்தது. பலருக்கும் சொல்லி அந்தத் தொகுப்பை வாங்க தூண்டினேன். உண்மையில் நம்மைப் போன்ற புத்தக காதலர்களுக்கு கட்டுப்படியாகும் விலையில் அந்த நடைப்பாதைக் கடைகளில்தான் புத்தகங்கள் கிடைத்தன.

இலக்கியத்தாகத்தோடு நூல்களை வாங்குகிறவர்களுக்கு தடித்தடியான நூல்களும், அவற்றின் மூச்சு முட்ட வைக்கும் விலையும், டி.இராசேந்தர் படப்பாடலான "ஆசப்பட்டு தொட்டுவேன், காசக் கண்டு விட்டுவேன்" என்கிற வரிகளை ஞாபகப்படுத்தி பெருமூச்சோடு அடுத்தடுத்த அரங்குகளுக்கு நகர்த்தியது. வேடிக்கைப் பார்க்கும் குழந்தை மனசுக்கு மட்டுமே நல்ல வேட்டை.

அருமையான தாள், உசத்தியான கட்டமைப்பு, உங்க பேரனுக்கும் பயன்படும் விலையப்பாக்காதீங்க என்கிற பளபளப்பு வார்த்தைகளைக் கண்டு சிரிக்காமல் இருக்க முடியவில்லை. நூலைப் படித்தபின்அந்த நூலை வீட்டில் பாதுகாக்க முடியாமல் அதற்கான இடம் இல்லாமல் தவித்துப் போகிறோம். நமது துணை மற்றும் குழந்தைகளே அந்த நூல்களைப் படிப்பதில்லை, நூல்களை வெறியோடு சேகரித்து வைத்திருந்தவர்களின் மறைவிற்குப் பின் அந்த நூல்களை குப்பையாக நினைத்து கொண்டு போய் பழையதாளகத்தில் தூக்கிப்போட்டு விடும் குடும்பத்தாரின் யதார்த்த நடவடிக்கைகளை பார்த்துக் கொண்டு தானே இருக்கிறோம்.

கறுப்பு பணம் வைத்துக் கொண்டு என்னடா செய்வது என்று விளங்காமல் திடீரென எங்காவது ஒதுக்குப்புறமான கிராமமாகப் பார்த்து புறப்பட்டுச் சென்று, அந்த ரூபாய் நோட்டுகளை எரித்து அதில் குளிர் காயும் கூட்டத்தினர் வேண்டுமானால் ஒரு அறிவார்ந்த தோற்றத்திற்காக தங்களின் பெரிய்ய வரவேற்பறையில் கண்ணாடி அலமாரி அமைத்து இதுப்போன்ற நூல்களை வாங்கி அடக்கமாக்கி வைத்து அழகுப் பார்க்கலாம். நமக்கெல்லாம் இயலுமா?

பாரதி சொன்னானே என் கவிதைகள் தீப்பெட்டி மண்ணெண்ணெய் போல மலிவாய் கிடைக்க வேண்டும் என்று, அது போல மலிவாய் கிடைத்தால் தான் நாங்கள் வாங்க முடியும். நல்ல நூலின் அடையாளம் அதன் ஒப்பனையான உருவாக்கத்தில் இல்லை, உயர்ந்த உள்ளடக்கத்தில் இருக்கிறது. மக்கள் பதிப்பு வரவேண்டும். அப்போதுதான் நல்லக் கருத்துக்கள அறிவுடமைச் சமுதாயத்தை உருவாக்கும். அருமையான, எளிமையான நூல்களுக்கும், சிற்றிதழ்களுக்கும் இந்த நூலரங்கில் இடமில்லை என்பத வருத்தத்திற்குரியதுதான்.

திரைத்துறையில் இருந்தப்படி எழுதுகிறவர்களை மக்கள் மொய்த்தார்கள். தமது நூல்களை வெளியிட்ட சிவக்குமார், உள்ளே அரங்கிற்கு வந்த பார்த்திபனுக்கெல்லாம் நல்லக் கூட்டம். கை வலிக்க, வலிக்க கையெழுத்துப் போட்டுக்கொண்டே தமது பக்கத்தில் இருந்தவரிடம் எப்படி வெளியே போவது என்று கேட்டப்படி கூட்டத்திலிருந்து தப்பிக்கும் குறியோடு அலைப்பாய்ந்தார் பாரத்திபன்.

ஆனால் அதே கண்காட்சியில் அமைதியாக அலைந்து கொண்டிருந்த தனித்துவமான அம்பைப் போன்ற படைப்பாளிகளைப் பற்றி நமது மக்களுக்கு தெரியவில்லை. ஒரு நூல் கண்காட்சியில் கொண்டாடப்பட வேண்டியவர்கள் எழுத்தாளர்களாய் தானே இருக்க வேண்டும். நூல்களை எழுதிய எழுத்தாளர்களுக்கு முறையான பணம் போய் சேருவதில்லை. அவர்கள் உச்சி முகரப்படுவதில்லை என்பதெல்லாம் வேடிக்கையாகத்தான் இருக்கிறது.

மேலைநாட்டு மக்களிடம் ஆடைஅணிவது, பகட்டாய் திரிவது, குடிப்பது, திண்பது, கும்மாளமிடுவது போன்றவற்றை கற்றுக் கொண்ட நமது சமூகம், எழுத்தாளர்களை அவர்கள் எப்படிக் கொண்டாடுகிறார்கள் என்பதைக் கற்றுக் கொள்ளவில்லை. எழுத்தாளர்களிடம் கைகுலுக்குவது, கையெழுத்து வாங்குவது, நிழற்படம் எடுத்துக் கொள்வது, என்று எழுத்தாளனை அவரகள் மேன்மைப்படுத்தும் விதமே நேர்த்தியானது. ஒரு நல்ல நூலை எழுதிய எழுத்தாளன் கூட அங்கு மிகப்பெரும் தொகையை ஈட்டி விடுகிறான் .ஆனால் இங்கோ தொடர்ந்து அற்புதமான படைப்புகளை தந்தவன் கூட வறுமையில் வாடுகிறான். யாரும் கண்டு கொள்ளப்படாமல் செத்துப் போகிறான்.

சென்னை நூல் கண்காட்சிக்கு செல்ல வேண்டி தஞ்சையில் புகைவண்டி ஏறக் காத்திருந்தபோது, வழியனுப்ப வந்த உறவினர்...

புத்தகக் கண்காட்சிக்காகவே சென்னைக்குப் போறிங்களா? இதெல்லாம் அதிகப்படியா தெரியல? இதுக்குன்னு செலவு செஞ்சுகிட்டு போவாங்களா? என்றார்.

நீங்க பழனிக்கு, திருப்பதிக்கு, சபரிமலைக்கு வேளாங்கன்னிக்கு, நாகூருக்குன்னு போறிங்கள அதெல்லாம் எந்தப் படிய சேர்ந்தது? எங்க மாதிரி ஆட்களுக்கு நூல் கண்காட்சி நடக்கும் இடம்தான் திருத்தலம்.

அவர் தான் வழியவிட்ட கேலிச்சிரிப்பை அவசர அவசரமாய் தன் உதட்டுக்குள் பதுக்கியவாறு பேச்சை மாற்றினார். இதுதான் நமது சமுதாய நிலைமை. நவீன பூசையறை, நவீன சமையலறை என்று தமது வீட்டை பார்த்து பார்த்து ஆடம்பரப்படுத்தும் அல்லது அலங்கரிக்கும் மக்கள், தங்களின் அறிவை கூர்மைப் படுத்திக் கொள்ளும் விதமாய் நூலக அறைப் பற்றி யோசிப்பதே இல்லை. மொழியை கற்றுக் கொள்வது எதற்கு? பிழைக்க. நன்றாக படிப்பது என்றால் என்ன? பாடநூலை மனப்பாடம் செய்து அதிக மதிப்பெண் பெறுவது, மலடாகிப் போய் கிடக்கிறது அறிவு நிலம். இவர்கள் மாற்றி சிந்திக்கும் காலம் வரும்போது அடிமைச் சமூகம் அறிவுச்சமூகமாய் மலரும். இன்றைக்கு அறிவியல் துறையில், மென்பொருள் துறையில் இருந்தபடி இணையத்தில் புழங்கும் இளைஞர்களுக்கு ஒருவித புரிதல் ஏற்பட்டிருக்கிறது. காத்திருப்போம் புது விடியல் வரும்.
- சுகன்.

6 கருத்துகள்:

  1. வணக்கம் சகோ...
    இப்போதெல்லாம் மண்ணெண்ணையும் மலிவு விலையில் கிடைப்பதில்லை! அறிவுத் திருக்கோயிலுக்கு வருடாந்திரப் புனிதப் பயணமல்லவா புத்தகத் திருவிழா!! வெள்ளிதோறும் நடமாடும் நூலகம் நிற்குமிடம் செல்கையில் எதிர்படும் பெண்மணிகளின் பூசை கூடையை புன்முறுவலுடன் தாண்டியதுண்டு நானும். (எங்க வீடருகே கோயில்) அம்பை போன்றவர்களைக் கண்டளாவத்தான் உங்களைப் போன்றவர்கள் !!

    பதிலளிநீக்கு
  2. உண்மை தான் சுகன், ஆசையாய் எடுத்துப் பார்த்து விலையைக் கண்டதும் அங்கேயே நான் திருப்பி வைத்த புத்தகங்கள் நிறைய... வழு வழு காகிதங்கள், வண்ண புகைப்படங்கள் என்று சில புத்தகங்கள் நம் கைக்கெட்டாத விலையில் நிற்கிறது.. அதிலும் கண்ணுக்குத் தெரியாத பலவித தளைகளால் பிணைக்கப் பட்டிருக்கும் என் போன்ற பெண்களுக்கு புத்தகத் திருவிழாவுக்குப் போவதே பெரிய சாதனையாய் இருக்கிறது சுகன். புத்தக திருவிழா அனுபவம்-- ஒரு கட்டுரை தயாராகிக் கொண்டிருக்கிறது ...

    பதிலளிநீக்கு
  3. \\\நீங்க பழனிக்கு, திருப்பதிக்கு, சபரிமலைக்கு வேளாங்கன்னிக்கு, நாகூருக்குன்னு போறிங்கள அதெல்லாம் எந்தப் படிய சேர்ந்தது? எங்க மாதிரி ஆட்களுக்கு நூல் கண்காட்சி நடக்கும் இடம்தான் திருத்தலம்.//

    நெத்தியடி

    பதிலளிநீக்கு
  4. எந்த பதிவும் இல்லாமல் ஏன் இத்தனை நாள்? பதிவுகள் போடவும் கொஞ்சம் நேரம் ஒதுக்குங்களேன் உங்கள் நெருக்கடியான பொழுதுகளில்.... உங்கள் வாசகியாய் ஒரு வேண்டுகோள் தான்..

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் சுகன்.
    வலை மிக அழகாக பொறாமைப் படுவதற்குரிய சகல குணங்களையும் உள்ளடக்கி புன்னகைக்கிறது.
    இந்தப் பதிவும் அற்புதம்.
    உங்கள் வலையையும் என் வலைப் பூவில் இணைத்திருக்கிறேன்.
    ப்ரியா சொன்னதை நானும் சொல்கிறேன். எழுதுங்கள்

    பதிலளிநீக்கு
  6. என் உயிரை மென்று சுவைக்கின்றன வேலைகள். பதிவுகளை இடுவதற்கான சூழல் இல்லை. தோழி கிருஷ்ணப்ரியா, தோழர் எட்வின் இவர்களின் வார்த்தைகள் எனக்கு புரோட்டின்களாக. இதோ கவிதைகள். ஜீவநீர் ஊற்றும்போதுதானே செடி அழகழகாய் பூக்கிறது. இதோ என்வாசம்.
    - சுகன்.

    பதிலளிநீக்கு