Loading...

ஞாயிறு, 30 அக்டோபர், 2011

மூளைத் திருடி

மூளைத் திருடி


மூச்சிறைக்க
ஓடிவந்த
குழந்தைச் 
சொல்லியது...


"சார்... சார்...
இவன் 
மூளையைத் திருடி
எங்கப்பா வித்து
குடிச்சுப்பிடிச்சு சார்..."


படீரென
எதிர்பாராத
அதிர் வேட்டின்
தாக்குதல் போல்
ஆடிப் போனேன்...


குழந்தை சுட்டிய
இடத்தில்
மாற்றுத்திறன்
மழலையொன்று
உதட்டைப் பிரிக்காமல்
பூ போல மலர்ந்து
நின்றிருந்தது !
                                                                         - சுகன்.

சனி, 29 அக்டோபர், 2011

மனசின் குறுகுறுப்பு

மனசின் குறுகுறுப்பு


வீதி வெளியில்
புர்ண்டலையும்
மின்னல் !


சிதறும்
ஒளித்துணுக்குகளை
மண் துகள்கள்
ருசித்து சிதைத்தன !


இருள் விலகி நின்று
விக்கித்துப் போனது


நடு இரவின்
யாருமற்ற
அந்த வெளியின்
ஏகாந்த அழகை
இரசித்தபடி
அலைந்து கொண்டிருந்தது
தென்றல் !


கண்ணை மூடி
உள்வெளியில்
சலனமுற்று கிடக்கும்
மனசின் குறுகுறுப்பு
அடங்க மறுத்து
நிமிண்டியபடி


                                                                                 - சுகன்

சனி, 17 செப்டம்பர், 2011

எதார்த்தம் - கவிதை

எதார்த்தம்

மென்று
மென்று


உமிழ் நீர்
புரண்டு


அதிர்வுகளை
மட்டுப்படுத்த
நெகிழ்ந்து


ஒரு 
கட்டத்தில்
துப்பப்படுகிற
சூயிங்கம் மாதிரி
எல்லாமும்


- சுகன்

திங்கள், 22 ஆகஸ்ட், 2011

பாழாப்போகட்டும்

வார்த்தைகள்
வன்முறையாய் வெட்டும்

கீச்சாதி பயலுவல்ல
நெட்டநெடிய தலைமுறையே
கூனிக் குறுகும்...

வார்த்தைகளில்
விசம் புதைந்திருக்கம்...


காலால் மூத்திரம் பெய்யிரவ
பேச வந்துட்டா...

சக பாலை இதைவிட
இழிவாய் எள்ளுதல் முடியாதுதானே?

கைலி கட்டியவர்கள்
கோயிலுக்குள் நுழையக்கூடாது

செருப்படி கொடுத்தவனையே
கண்ணப்ப நாயனாராய்
ஏத்துக் கொண்ட தெய்வம்
உள்ளே மௌனமாய்...

பட்டு வேட்டி கட்டியிருந்தாலும்
சூத்திரப் பயல்கள்
கருவறைக்குள்
நுழைய முடியாது
சாமியோவ்...
- சுகன்

வெள்ளி, 3 ஜூன், 2011

தலையங்கம் - சமச்சீர்கல்வி

சமச்சீர் கல்வியை மறுத்து முதல் அதிர்ச்சியை, நாட்டின் பெரும்பான்மையாக இருக்கக் கூடிய, வாக்களித்ததில் பெரும் பங்கு வகித்த ஏழைத்தமிழ் மக்களுக்கும், அவர் தம் குழந்தைகளுக்கும் தந்திருக்கிறது ஜெயலலிதா அரசு.

சமச்சீர் கல்வி தரமற்றக் கல்வி, எல்.கே.ஜி மாணவர்களுக்கு சொல்ல வேண்டிய கல்வியை முதல் வகுப்புக்கு கொடுக்கிறார்கள். பணக்காரர்களை ஏழைகளாக ஆக்கப் பார்க்கிறார்கள். மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி அரசுப் பள்ளிகளைப் போன்று தரம் குறைந்த கல்வியை தனியார் பள்ளிகளும் கொடுக்க வேண்டும் என்கிற நோக்கம் கொண்ட கல்வி, என்று கல்வி வியாபாரிகள் குதிக்கிறார்கள். தடை செய்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துகளை தெரிவிக்கிறார்கள். 200 கோடி மக்கள் பணத்தில் அச்சடிக்கப்பட்ட நூல்களை குப்பையில் போட்டு விட்டு பழைய நூல்களை, பள்ளிகள் திறக்கும் தேதியை தள்ளி வைத்து அச்சடிக்க தொடங்கியிருக்கும் ஜெயலலிதா அரசின் போக்கு கண்டிக்கத்தக்கது.

சமச்சீர்கல்வி நூல்களை தயாரித்தது கருணாநிதியோ அல்லது அவரது வாரிசுகளோ அல்லது தி.மு.க. கழக கண்மணிகளோ இல்லை. அதை தயாரித்தது கல்வியாளர்கள், அறிஞர்கள், தேர்ந்த ஆசிரியர்கள். அதற்காக பல திங்கள்கள் உழைத்து உண்ணாமல், உறங்காமல் அர்ப்பணிப்பு உணர்வோடு வேலை செய்து தயாரித்திருக்கிறார்கள். குறைகள் இருக்கலாம் அவற்றை களையலாம். கருணாநிதியே சொல்வது போல அவரது செம்மொழிப்பாடல்தான் உறுத்துகிறது என்றால் அதை நீக்கிவிடலாம். அடுத்தடுத்த ஆண்டுகளில் தவறுகளை திருத்தி, திருத்தியப் பதிப்புகளை வெளியிடலாம்.

ஆட்டம் என்ற சொல்லுக்குப் பொருள் இதற்கு மேல் பிளக்க முடியாது என்பதுதான். இது அணுவைப் பற்றிய ஆரம்ப காலகட்டங்களில் வைத்தப் பெயர். ஆய்வு செய்து வளர வளர அணுவைப் பிளந்து சாதனை செய்தார்கள். என்றாலும் இப்போதும் அதன் பெயர் ஆட்டம் தான். இது போன்றுதான் இத்தகைய முயற்சிகளும். சமச்சீர் கல்வி என்பது தேர்ந்த கல்வி வல்லுநர்களால் வடிவமைக்கப்பட்டது. ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கானது. நீண்ட நாள் கனவு. அதை தனது அதிகார மனப்பாங்கால் ஒரு உத்தரவில் குப்பைக்கு அனுப்பும் ஜெயலலிதாவின் அரசு வருகிற ஐந்தாண்டுகளில் என்னஎன்னவெல்லாமோ செய்யப் போகிறதோ என்கிற அச்சத்தை கிளப்பியிருக்கிறது என்பதை முதலில் ஜெயலலிதா உணர்ந்து கொள்ள வேண்டும். இல்லை என்றால் அடுத்த ஐந்தாண்டுகளுக்குப் பிறகும் கட்டாயம் தேர்த்ல் வரும்... மக்களின் கையில் வாக்குரிமை தீர்ப்பை எழுத தயாராய் இருக்கும்.

செவ்வாய், 17 மே, 2011


கவலையின் விளிம்பில்

புத்தகங்கள்
வெளியிடப்படும் போதெல்லாம்
கவலை கொள்ளாமல் முடியவில்லை
காடுகள் அழிந்தல்லவா காகிதம்...

ஒவ்வொரு முறை 'புத்தகம்'
வெளியிடும் போதும்
ஒரு மரக்கன்று நட்டு
பரிகாரம் செய்யலாம் !

பூமி நடுங்கி எச்சரிக்கிறது
வீட்டைவிட்டு வெட்ட வெளியில்
கூட்டு வாழ்க்கை
எதிர்காலத்தில் நிகழலாம்

நிழலுக்கும் மறைப்புக்கும்
மரங்கள் அவசியமென
உணர்வது நல்லது !

கிராமங்கள்
அருகிக் கொண்டிருக்கின்றன
தவிர்க்க முடியாததாகிறது
பிளாஸ்டிக் பை !

இன்னும் சில ஆண்டுகளில்
நம் மூச்சுக்குழலுக்குள்
புழங்கக் காத்திருக்கும்
விசம் பற்றிய கவலையற்று
ஓடிக் கொண்டிருக்கிறோம்

எங்கெங்கும் பாலிதீன் கூச்சல்கள்
தேய்ந்து போகும்
நமது வாழ்வின் அர்த்த நாளங்கள்

பிணங்களைச் சுமக்கும்
ஒரு
பாலிதீன் பையாக
பூமி

மரங்களின் அவசியம் பற்றி
எழுதிக் கொண்டே
மரங்களைத் தின்கிறோம்...
இந்தக் கவிதையைப் போல !

செரிப்பதற்கு லாயக்கற்றதா
என்பதைப் பற்றி
யோசிக்காமலேயே
எல்லாம்
நடந்து விடுகிறது !

கவிதை, ஒளிப்படம் - சுகன்.

புதன், 11 மே, 2011


எங்காவது ஒரு மூலையில்

முதிர்ந்த பார்வை
கிரகணம் அகற்றும் !

முழுசாய்
அழுக்கு நீக்கி முடியாது

தொலைந்து கொண்டிருக்கிற
அற்புதங்களுக்கிடையில்
அனுபவம் தேடி
மூச்சு வாங்குகிற
பித்தத்தின் நிழலில்
சிற்பமொன்று
ஒளிந்து கொண்டிருக்கிறது
பழங்காலத்
தீய்ந்த வாசனையோடு !

கடந்து கடந்து ஓடுகிற
என் நெடுவெளிப் பயணத்தில்
பூரணத்துவத்துக்கான
ஒத்திகை
அடிக்கடி நிகழ்ந்து
தோற்கும் !

எங்கோ ஒரு
பிடிபடாத மூலையில்
என்
கேள்விகளுக்கான
சுரப்பு இருக்கலாம்... .. .


கவிதை, ஓளிப்படம் - சுகன்.

சனி, 7 மே, 2011


கோடைக்காற்று

காதலியின் பார்வைகளாய் காற்றே வீசு !
கசகசக்கும் உடலினையே தழுவித் தேற்று

நாதங்கள் மீட்டிடுவாய் செடியின் ஊடே !
நாசிக்குள் புகுந்தின்பம் தருவாய் சிட்டே !

ஆதவனின் ஆத்திரத்தில் பகலில் நாங்கள்
அல்லலுற்ற கொடுமைக்கு மருந்தும் நீயே !

பாதங்கள் இல்லாமல் நடந்தே வந்து
பனிமலரின் குளிர்வினையே இரவில் பூசு !


அந்தியிலே உடலினிலே மோதி இன்பம்
அவிழ்க்கின்ற பூஞ்சிறகின் பெயரோ தென்றல் !

சந்திரனை மேகவலை வீசி வீசி
சிறைப்பிடித்து மகிழ்வதுவே உந்தன் வேலை !

மந்திரமா தந்திரமா நீயும் வந்தால்
மனசுக்குள் கவிக்கன்னி தருவாள் முத்தம் !

செந்தமிழின் தாயகமாம் பொதிகை விட்டு
சதிராடி வருபவளைச் சேர்ந்தால் இன்பம் !

சுமந்துவரும் செய்திகளைக் கரைப்பாள் காதில் !
சுகந்தமனம் நெஞ்சடுக்கில் நிறைப்பாள் நாளும் !

அமுதத்தை உடல்பூசி கனவு தேசம்
அழைத்திடுவாள், வாகனங்கள் இல்லா மல்தான் !

சமர்த்தாக காதலரின் இடையில் போவாள் !
சத்தமின்றி அவர்குறும்பை ரசித்துப் பார்ப்பாள் !

சமத்துவத்தை முழுவதுமாய் ஏற்ற தாலே
சாதிமதப் பேதமின்றித் திகழு கின்றாள் !

கவிதை, ஒளிப்படம் - சுகன்ஞாயிறு, 3 ஏப்ரல், 2011

அவசியம்

அவசியம்

அதிர்வுகளின் ஊடே வாழ்க்கை...
ஒவ்வொரு நாளும்
படுக்கப் போகையிலும்
எழுகையிலும்
எது,எப்படி
நம்மைத் தாக்குமோ
என்கிற அச்சத்தைத்
தவிர்க்க முடியவில்லை

ஊடகங்கள்
ஊதிப்பெருத்துக் கிடக்கின்றன
நமது நிம்மதியைக்
கூறுபோட்டபடி

அறிவியல் வளர்ந்து
திமிரெடுத்து அலைகிறது...
மனிதத்தின் உன்னதத்தைக்
கொத்தி, கொத்தி
தன் இருப்பைக் காட்டிக் கொள்கிறது...

அலாதியாய்
பயமற்று
காற்றைப் போல அலைகிற
ஆசை
ஆவியாகிக் கொண்டிருக்கிறது...

எதார்த்தமாய் வாழ
எது தடையாய் இருப்பினும்
உடைக்கலாம்...

எல்லாவற்றையும் விட
அவசியமானது
சுதந்திரம்...

கவிதை, நிழற்படம் - சுகன்.

செவ்வாய், 29 மார்ச், 2011


1.

இழப்பு

தூசில் கிடக்கிறது
ரசனை...

அவகாசம் இல்லை
மொட்டை மாடியிருந்தும்
முழுநிலா ருசிக்க

ஓடிக் கொண்டிருக்கும்
அவசரத்தில்
அந்தி, சந்தி
புசிப்பது யார்?

2.

மௌனமாய் இருப்பது
முடிவெடுத்த வேளையில்
சிணுங்கியது கைப்பேசி.

3.

உதட்டுக்குப்
புன்னகை அழகு
புன்னகை கலைந்து
மௌனம் குந்தப்
பேரழகு

4.

எப்போதும்
வருவதில்லை
எதிர்பார்க்கும் கடிதம்

திடீரென வந்து நிற்பாய்
நடுநிசியில்
கடிதம் எழுதாக்
கோபம் சிதைய.
- சுகன் - நிழற்படம் - சுகன்.

செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

புகைப்படம் சுகன்.
சென்னைப் புத்தகக் கண்காட்சி

சென்னைப் புத்தக கண்காட்சி வழக்கம் போல் கவர்ச்சியாய், பிருமாண்டமாய் கண்களைப் பரவசப்படுத்தியது. இதுவரை இல்லாத அளவிற்கு நூல் விற்பனை என்று, வந்த தகவலும் கேட்க சுகமாய்தான் இருந்தது.

நடைப்பாதை பழைய நூல் கடைகளில் மக்கள் குழுமிக் கிடந்தனர். நல்ல நூல்களும் கிடைத்தன. தஞ்சை ப்ரகாஷ் கட்டுரை சென்ற ஆண்டு காவ்யா அரங்கில் 140 கொடுத்து நண்பருக்கு வாங்கிக் கொடுத்தேன். அந்தக் கட்டுரைகளை நான்தான் தொகுத்தேன் என்றாலும், வேறொருவர் தொகுத்ததாகத்தான் நூலில் இருக்கும். அதுதானே தமிழக புத்தக வியாபார சூழல். அந்த தஞ்சை ப்ரகாஷ் கட்டுரைத் தொகுப்பு ஐம்பது ரூபாய்க்கு கிடைத்தது. பலருக்கும் சொல்லி அந்தத் தொகுப்பை வாங்க தூண்டினேன். உண்மையில் நம்மைப் போன்ற புத்தக காதலர்களுக்கு கட்டுப்படியாகும் விலையில் அந்த நடைப்பாதைக் கடைகளில்தான் புத்தகங்கள் கிடைத்தன.

இலக்கியத்தாகத்தோடு நூல்களை வாங்குகிறவர்களுக்கு தடித்தடியான நூல்களும், அவற்றின் மூச்சு முட்ட வைக்கும் விலையும், டி.இராசேந்தர் படப்பாடலான "ஆசப்பட்டு தொட்டுவேன், காசக் கண்டு விட்டுவேன்" என்கிற வரிகளை ஞாபகப்படுத்தி பெருமூச்சோடு அடுத்தடுத்த அரங்குகளுக்கு நகர்த்தியது. வேடிக்கைப் பார்க்கும் குழந்தை மனசுக்கு மட்டுமே நல்ல வேட்டை.

அருமையான தாள், உசத்தியான கட்டமைப்பு, உங்க பேரனுக்கும் பயன்படும் விலையப்பாக்காதீங்க என்கிற பளபளப்பு வார்த்தைகளைக் கண்டு சிரிக்காமல் இருக்க முடியவில்லை. நூலைப் படித்தபின்அந்த நூலை வீட்டில் பாதுகாக்க முடியாமல் அதற்கான இடம் இல்லாமல் தவித்துப் போகிறோம். நமது துணை மற்றும் குழந்தைகளே அந்த நூல்களைப் படிப்பதில்லை, நூல்களை வெறியோடு சேகரித்து வைத்திருந்தவர்களின் மறைவிற்குப் பின் அந்த நூல்களை குப்பையாக நினைத்து கொண்டு போய் பழையதாளகத்தில் தூக்கிப்போட்டு விடும் குடும்பத்தாரின் யதார்த்த நடவடிக்கைகளை பார்த்துக் கொண்டு தானே இருக்கிறோம்.

கறுப்பு பணம் வைத்துக் கொண்டு என்னடா செய்வது என்று விளங்காமல் திடீரென எங்காவது ஒதுக்குப்புறமான கிராமமாகப் பார்த்து புறப்பட்டுச் சென்று, அந்த ரூபாய் நோட்டுகளை எரித்து அதில் குளிர் காயும் கூட்டத்தினர் வேண்டுமானால் ஒரு அறிவார்ந்த தோற்றத்திற்காக தங்களின் பெரிய்ய வரவேற்பறையில் கண்ணாடி அலமாரி அமைத்து இதுப்போன்ற நூல்களை வாங்கி அடக்கமாக்கி வைத்து அழகுப் பார்க்கலாம். நமக்கெல்லாம் இயலுமா?

பாரதி சொன்னானே என் கவிதைகள் தீப்பெட்டி மண்ணெண்ணெய் போல மலிவாய் கிடைக்க வேண்டும் என்று, அது போல மலிவாய் கிடைத்தால் தான் நாங்கள் வாங்க முடியும். நல்ல நூலின் அடையாளம் அதன் ஒப்பனையான உருவாக்கத்தில் இல்லை, உயர்ந்த உள்ளடக்கத்தில் இருக்கிறது. மக்கள் பதிப்பு வரவேண்டும். அப்போதுதான் நல்லக் கருத்துக்கள அறிவுடமைச் சமுதாயத்தை உருவாக்கும். அருமையான, எளிமையான நூல்களுக்கும், சிற்றிதழ்களுக்கும் இந்த நூலரங்கில் இடமில்லை என்பத வருத்தத்திற்குரியதுதான்.

திரைத்துறையில் இருந்தப்படி எழுதுகிறவர்களை மக்கள் மொய்த்தார்கள். தமது நூல்களை வெளியிட்ட சிவக்குமார், உள்ளே அரங்கிற்கு வந்த பார்த்திபனுக்கெல்லாம் நல்லக் கூட்டம். கை வலிக்க, வலிக்க கையெழுத்துப் போட்டுக்கொண்டே தமது பக்கத்தில் இருந்தவரிடம் எப்படி வெளியே போவது என்று கேட்டப்படி கூட்டத்திலிருந்து தப்பிக்கும் குறியோடு அலைப்பாய்ந்தார் பாரத்திபன்.

ஆனால் அதே கண்காட்சியில் அமைதியாக அலைந்து கொண்டிருந்த தனித்துவமான அம்பைப் போன்ற படைப்பாளிகளைப் பற்றி நமது மக்களுக்கு தெரியவில்லை. ஒரு நூல் கண்காட்சியில் கொண்டாடப்பட வேண்டியவர்கள் எழுத்தாளர்களாய் தானே இருக்க வேண்டும். நூல்களை எழுதிய எழுத்தாளர்களுக்கு முறையான பணம் போய் சேருவதில்லை. அவர்கள் உச்சி முகரப்படுவதில்லை என்பதெல்லாம் வேடிக்கையாகத்தான் இருக்கிறது.

மேலைநாட்டு மக்களிடம் ஆடைஅணிவது, பகட்டாய் திரிவது, குடிப்பது, திண்பது, கும்மாளமிடுவது போன்றவற்றை கற்றுக் கொண்ட நமது சமூகம், எழுத்தாளர்களை அவர்கள் எப்படிக் கொண்டாடுகிறார்கள் என்பதைக் கற்றுக் கொள்ளவில்லை. எழுத்தாளர்களிடம் கைகுலுக்குவது, கையெழுத்து வாங்குவது, நிழற்படம் எடுத்துக் கொள்வது, என்று எழுத்தாளனை அவரகள் மேன்மைப்படுத்தும் விதமே நேர்த்தியானது. ஒரு நல்ல நூலை எழுதிய எழுத்தாளன் கூட அங்கு மிகப்பெரும் தொகையை ஈட்டி விடுகிறான் .ஆனால் இங்கோ தொடர்ந்து அற்புதமான படைப்புகளை தந்தவன் கூட வறுமையில் வாடுகிறான். யாரும் கண்டு கொள்ளப்படாமல் செத்துப் போகிறான்.

சென்னை நூல் கண்காட்சிக்கு செல்ல வேண்டி தஞ்சையில் புகைவண்டி ஏறக் காத்திருந்தபோது, வழியனுப்ப வந்த உறவினர்...

புத்தகக் கண்காட்சிக்காகவே சென்னைக்குப் போறிங்களா? இதெல்லாம் அதிகப்படியா தெரியல? இதுக்குன்னு செலவு செஞ்சுகிட்டு போவாங்களா? என்றார்.

நீங்க பழனிக்கு, திருப்பதிக்கு, சபரிமலைக்கு வேளாங்கன்னிக்கு, நாகூருக்குன்னு போறிங்கள அதெல்லாம் எந்தப் படிய சேர்ந்தது? எங்க மாதிரி ஆட்களுக்கு நூல் கண்காட்சி நடக்கும் இடம்தான் திருத்தலம்.

அவர் தான் வழியவிட்ட கேலிச்சிரிப்பை அவசர அவசரமாய் தன் உதட்டுக்குள் பதுக்கியவாறு பேச்சை மாற்றினார். இதுதான் நமது சமுதாய நிலைமை. நவீன பூசையறை, நவீன சமையலறை என்று தமது வீட்டை பார்த்து பார்த்து ஆடம்பரப்படுத்தும் அல்லது அலங்கரிக்கும் மக்கள், தங்களின் அறிவை கூர்மைப் படுத்திக் கொள்ளும் விதமாய் நூலக அறைப் பற்றி யோசிப்பதே இல்லை. மொழியை கற்றுக் கொள்வது எதற்கு? பிழைக்க. நன்றாக படிப்பது என்றால் என்ன? பாடநூலை மனப்பாடம் செய்து அதிக மதிப்பெண் பெறுவது, மலடாகிப் போய் கிடக்கிறது அறிவு நிலம். இவர்கள் மாற்றி சிந்திக்கும் காலம் வரும்போது அடிமைச் சமூகம் அறிவுச்சமூகமாய் மலரும். இன்றைக்கு அறிவியல் துறையில், மென்பொருள் துறையில் இருந்தபடி இணையத்தில் புழங்கும் இளைஞர்களுக்கு ஒருவித புரிதல் ஏற்பட்டிருக்கிறது. காத்திருப்போம் புது விடியல் வரும்.
- சுகன்.

சனி, 15 ஜனவரி, 2011

தஞ்சை ப்ரகாஷ் - கோபாலியேவிச் குறிப்புகள் நூலுக்கு சுகன் எழுதிய முன்னுரை

தஞ்சை ப்ரகாஷ்

தெய்வ அருளும் சுகமும் (சுகன்) அல்லவா சுகன்?
வாழ்வின் எல்லா அம்சங்களையும் கவிஞனால்தான் ரசிக்கவும்,
உணரவும், உள்வாங்கவும் முடியும் - அதனை நடைமுறைப்
படுத்தாவிட்டால் கவிஞன் வெறும் கலைஞன் மட்டுமே.
வாழ்வின் பொருள் புரியாது, புரிந்தாலும் பின்பற்றாது
கனவைப் பின் தொடர்ந்தால் போதுமா?

இலக்கியத்தின் நோக்கம் சத்தியம் அல்லவா?

- தஞ்சை ப்ரகாஷ் 27-4-1996இல் எனக்கு (சுகனுக்கு) எழுதிய ஒரு கடிதத்தில்...

இயேசுநாதரின் - பிரசங்கங்கள், கதைகள், உரையாடல்கள், அருளாசிகள், அற்புதங்கள், அனுபவங்கள், துன்பங்கள், மகிழ்வுகள், விருந்துகள், மாளாத பசி, ஏமாற்றங்கள், மன்னித்தல்கள், மறந்துபோதல்கள், மௌனங்கள், ஏக்கங்கள், தாபங்கள், தவ்றுதல்கள், வெறுப்புகள், விருப்புகள் துரோகங்கள், ஆசைகள், அர்ப்பணிப்புகள், அன்பு, காமம், இப்படி சகலத்தையும் புரிந்து கொள்ள அவரது மறைவிற்குப் பிறகு அவரது சீடர்களும், அபிமானிகளும் பதிவு செய்து உலகின் கண்களுக்கு ஓட விட்ட குறிப்புகள் உதவுகின்றன...

அது போல ப்ரகாஷ்சுக்கு, அவரோடு பாகியவர்களால் குறிப்புகள் எழுதப்பட வேண்டும் என்பதன் தொடக்கமே... இந்தத் தஞ்சை ப்ரகாஷ் கோபாலியேவிச் சின் குறிப்புகள்.

ப்ரகாஷ்சால் உருவாகியவர்களும், ப்ரகாசிடம் உருகியவர்களும் தங்கள் குறிப்புகளை தரலாம். ப்ரகாஷ் பலதரப்பட்ட மனிதர்களிடமும் பழகியவர். குறிப்பாக பெண்களின் மனசை திறக்கும் சாவியை ப்ரகாஷ் வைத்திருந்தார். ப்ரகாசோடு பழகிய பெண்களை நான் சந்தித்து பேசியிருக்கிறேன்... அவர்கள் அவரைப் பற்றி பேசும்போது, அவர்கள் முகத்தில் தெறிக்கும் ஒளி, ப்ரகாசின் ஒளி. அவர்கள் ப்ரகாஷ் குறிப்புகளை எழுதுவார்களா? மாட்டார்கள். அந்தப் பெண்களில் பலருக்கு வாழ்க்கையை சமாளிப்பதே பெரும்பாடு. அவர்கள் எங்கே தாளைத்தேடி, நேரம்தேடி, எழுதுகோலைத் தேடி பதிவு செய்யப்போகிறார்கள். இலக்கிய வாதிகளே தடுமாறும் போது... அவர்கள் என்ன செய்ய முடியும்?

நான் கூட ப்ரகாஷ் பற்றிய பல குறிப்புகளை எழுதியிருக்கிறேன். அச்சாக்கமும் பெற்றிருக்கிறது. தஞ்சாவூர்க் கவிராயர் இந்தக் குறிப்புகளை போலித்தனம் கலவாத ஒருவித மின்சாரம் பாய தந்திருக்கிறார். அந்தக் குறிப்புகளை வாசிக்கும்போது, அது சொல்லும் நிகழ்வுகளில் நாமும் கூடவே இருந்திருக்கிறோம் போல என்கிற ஒரு தோற்றம் எழுகிறது. அதுதான் இந்தக் குறிப்புகளின் வெற்றி.

ப்ரகாஷோடு என் பழக்கம் அலாதியானது. அவருக்கும் எனக்கும் இடையில் நிறைய முரண்பாடுகள் முளைத்துக் கிடப்பதாக எண்ணி விலகியே இருந்தேன். அவர் நடத்தும் சும்மா கூட்டங்களுக்கு செல்வேனே தவிர, அவரோடு நெருங்குவதில் எனக்கு விருப்பம் இல்லை.

தமிழுக்கும், தமிழ் இலக்கியத்துக்கும் எதிரானவர் என்கிற பேச்சு இருந்தது. அவரோடு பேசி விட்டு வருகிறவர்கள் அவரைப் பற்றி சொல்லும் அபிப்ராயங்கள் எனக்குப் பிடித்தமானதாக இல்லை. ஆனால் தீடிரென எப்படி எங்கள் இருவருக்கும் இடையில் இருந்த தடைகள் காணாமல் போனது என்று தெரியவில்லை. 1985இல் இருந்து அவர் மறையும் வரை, அவரோடு மிக நெருக்கமாகிப் போனேன்.

நான் தேடிச் சென்று மணிக்கணக்கில் பேசியது அவரிடம் மட்டும்தான். ப்ரகாசோடு பழகப் பழகத்தான் அவருடைய அறிவின் ஆளுமையை இரசிக்க முடிந்தது. அவரோடு தொலைந்துப் போன உன்னதங்கள் ஏராளம். காலவெள்ளத்தில் மறைந்துப் போன சிந்துவெவளி நாகரீகம் போல புதைந்துப் போன தனித்துவம் மிக்க நாகரீகம் அவர்.

இப்படி ஒரு மனிதன் வாழ்ந்திருக்கக் கூடுமோ? என்கிற ஐயத்தை உண்டு பண்ணுகின்றன தஞ்சாவூர்க் கவிராயரின் இந்தக் குறிப்புகள். ப்ரகாஷ் வாழ்ந்த வாழ்க்கைக்கு உயிர் சாட்சிகளாக நாங்கள் இருக்கிறோம் என்பது எழும் ஐயங்களை அடக்கும்.

ப்ரகாஷ், தான் வாசிக்கும் நூட்களின் முன் பக்கத்தில் அந்த நூட்களைப் பற்றிய குறிப்புகளை ஆழமாகவும், அரிய தகவல்களோடும், விமர்சனங்களோடும் எழுதும் பழக்கம் உடையவர். அவர் மறைவுக்குப் பின், எலிகளின் மேய்ச்சல் நிலமாய் இருந்த அந்த நூட்களை ஒழுங்குப்படுத்தும்போது அவற்றைப் படிக்க நேர்ந்தது. அவசியம் தொகுக்க வேண்டிய குறிப்புகள் அவை. சிலவற்றை நான் அப்போது அவசர அவசரமாய் எழுதினேன்.

ஆயிரக்கணக்கில் இருந்த அந்த நூட்களில் இருந்து அந்தக் குறிப்புகளை திரட்டுவது என்பது அவவளவு எளிதான செயலும் இல்லை.

அந்த நூட்களை தஞ்சாவூரிலேயே, அவரது பெயரிலேயே ஆய்வு மாணவர்களின் நூலகமாக வைக்க ஆசை இருந்தது. ஆனால் அவற்றை பராமரிக்க சிரமப்பட்ட, ப்ரகாஷின் துணைவியார், எனக்குக் கூட தெரிவிக்காமல் அந்த நூட்களை சென்னையில் உள்ள ஒரு நூலகத்திற்கு கொடுத்து விட்டார்.

அந்த நூலகத்திலிருந்து, பல நூலகங்களுக்கு அந்த நூல்கள் சிதறிப் போய் விட்டதாக தகவல். இனிமேல் அவற்றைத் தேடிப்போய் தொகுப்பது என்பது எளிதான ஒன்றாக இருக்காது. தமிழ் இலக்கியத்தில் பதிவாக வேண்டிய அந்தக் குறிப்புக்களை தவற விட்டு விட்டோமே என்கிற நெருடல் இன்னும் உள்ளத்தில் இருக்கிறது. தஞ்சாவூர்க் கவிராயரின் இந்தக் குறிப்புகளை வெளியிடுவது ஆறுதலாகவும் இருக்கிறது.

ப்ரகாஷ் சுகமான வெயில். அதில் காய்ந்தவர்களுக்கு அதன் அருமை பெருமைப் புரியும். அந்த வெயிலின் இதமும் பதமும் உள் வாங்கியவர்களுக்கு வாய்த்த பாக்கியம். ஒழுங்காக உள் வாங்கியிருந்தால் அது நிச்சயமாய் வெளிப்படும்.

சூரியனிடமிருந்து கவர்ந்த வெளிச்சத்தை நிலவு துப்பியே ஆகவேண்டும். அதை அந்த நிலவே நினைத்தால் கூட ஒளிக்க முடியாது. மறுக்க முடியாது. அது போலத்தான் ப்ரகாசிடமிருந்து பெற்ற அனுபவங்கள். அவை நிமிண்டிக் கொண்டே இருக்கும். அவற்றை சொல்லும்போதும், எழுதும்போதும்... அந்த நிகழ்வுகள் நிகழ்ந்தக் காலத்துக்குள் மீண்டுமொருமுறை புரளும் அதிசயமும் கூடுதலாக கிடைக்கும்.

தஞ்சாவூர்க்கவிராயருக்கு அப்படி ஒரு பரவசம் இந்தக் குறிப்புகளை எழுதும் போது நிச்சயம் கிடைத்திருக்கும். படிக்கும் நமக்கே அது உண்டாகும் போது அவருக்கு வாய்க்காமல் இருந்திருக்குமா?

ப்ரகாஷின் நினைவு நாளில் இதை வெளியிடுவது கூடுதல் இன்பம். தஞ்சாவூர்க் கவிராயரின் அர்ப்பணிப்பான பணி இது. ப்ரகாஷ்சுக்கு அவர் எழுப்பியிருக்கும் காலத்தால் அழியாத தாஜ்மகால் இது. படித்துப் பாருங்கள் ... நீங்களும் உணர்வீர்கள் அதில் வீசி அலைகிற காதல் வாடையை...

தஞ்சை ப்ரகாஷ் கோபாலியேவிச் சின் குறிப்புகள்
- தஞ்சாவூர்க் கவிராயர்
கட்டுரைகள் - ரூ 25
சுகன் பைந்தமிழ்த் தடாகம்,
அம்மாவீடு, சி - 46 இரண்டாம் தெரு, முனிசிபல் காலனி,
தஞ்சாவூர் 613007

வியாழன், 13 ஜனவரி, 2011

கோவில்கள்

மனித மனங்களின்
புலம்பல் முகாம்கள்

இளவட்டங்களின்
மன்மத மடங்கள்

வயதானவர்களின்
வம்பரங்கங்கள்

கலாச்சாரத்தின்
கல் வடுக்கள்

கடவுள்களின்
சிறைச்சாலைகள்

இங்கே
அர்ச்சனை
அலங்கார
தண்டனைகளை
அனுபவித்தபடி
தெய்வங்கள்

கோவில்கள் பல
களையிழந்து
கிடக்கிறதே
காவிரியைப்போல

கோவில் நிலங்களின்
குத்தகைக்காரர்கள்
என்ன
கர்நாடகக்காரர்களா?

ஒரு விதத்தில்
கோவில்களும்
ரசிகர் மன்றங்கள்தான்.
- சுகன்

செவ்வாய், 11 ஜனவரி, 2011


தாஜ்மகால் அழகல்ல
பச்சை
ஆடைகட்டிப்
பளபளக்கும்
வயல் கன்னிகள் முன்
ஓர்
விதவையாய் நிற்கும்
தாஜ்மகால்
அழகல்ல

ஒளிக்கைகள்
பட்டவுடன்
இதழாடை
கழன்றுவிழ
சற்றே
நாணத்தால்
தலைசாய்க்கும்
அல்லிகள் முன்

சலவை ஆடைக்குள்
சல்லாபிக்க
சந்திரனை
துணைக்கழைக்கும்
தாஜ்மகால்
அழகல்ல

காதலிக்காக
எழுத்துப் பூக்களில்
நான்
எடுக்கும்
கவிதை
மாளிகைக்குமுன்
பூமியிலே
முளைத்திருக்கும்
கல்லறைக் காளான்
தாஜ்மகால்
அழகல்ல

ஆமாம்...
அழகல்ல
- சுகன்