வியாழன், 9 டிசம்பர், 2010

கவிமாமணி வெற்றிப்பேரொளி

கவிமாமணி வெற்றிப்பேரொளி

1980௦ களின் மத்தியில் கவிதை எழுத வந்தவர் வெற்றிப்பெரொளி. மரபு. புதிது. ஹைக்கூ என எழுதி தனக்கென்று தனி முத்திரை பதித்தவர். அறுபது வயதை நெருங்கும் கவிஞர் என்று சொல்லி விடமுடியது. உள்ளத்திலும், உடலிலும் இளமையாய் இன்றும் இயங்குவது அவரின் தனிச்சிறப்பு. தன் வீட்டிற்கு "கவிதை" என்று பெயர் வைத்திருக்கிறார்.

1991 - இவரது முதல் கவிதைத் தொகுப்பு "கருப்புநெருப்பு" உவமைக்கவிஞர் சுரதா, இன்றைய வணிகவரித்துறை அமைச்சர் இலக்கியக்காவலர் சி.நா.மீ.உபயதுல்லா அவர்கள் போன்றோர் நிறைந்த அவையில் தஞ்சையில் வெளியிடப்பட்டது. அந்தக் காட்சி நிழற்படமாய் இதோ.

சுகன் தொடங்கப்பட்ட 1987 இல் இருந்து இன்று வரை சுகனில் அவர் எழுதிய கவிதைகள் ஒரு தொகுப்பாய் விரைவில் வரப்போகிறது.

இன்றைக்கு எழுதிக்கொண்டிருக்கிற கவிஞர்களின் தரப்பட்டியல் ஒன்று தயாரித்தால் அதில் நிச்சயம் வெற்றிக்கு இடம் உண்டு.

கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் கையால் கவிமாமணி விருது பெற்றவர். மாநில அரசின் "நல்லாசிரியர்" விருது பெற்றவர். தமிழத்தின் பல இடங்களில், பல அமைப்புகள் பல விருதுகளை கொடுத்து வெற்றிக்கு சிறப்புகளை செய்திருக்கிறது.

தான் வாழும் திருக்குவளையில் "கவிதை வெளி" என்கிற அமைப்பை நடத்தி வருகிறார். அந்த அமைப்பின் சார்பாக அக்டோபர் மாதத்தில் சௌந்தரசுகன் இதழாய்வு கூட்டத்தை நடத்தினார். "பௌர்ணமி" என்கிற வட்ட வடிவ கையெழுத்து இதழை நடத்தியவர். தஞ்சை தமிழ்த்தாய் இலக்கிய அமைப்பின் தலைவராகவும், சுரதா தொடங்கிய உலக தமிழ் கவிஞர் பேரவையின் முக்கிய பொறுப்பிலும் இருக்கிறார்.
- சுகன்