வெள்ளி, 31 டிசம்பர், 2010


மரங்கள்
பசுமைரசம்
ததும்பும்
மரக்கிண்ணங்கள்

வசந்தகாலம்
தேர்தல்காலமா?
மரச்சுவர் எங்கும்
அ.தி.மு.க. சின்னங்கள் !

மரங்கள்
ஏழைப்பறவைகளின்
குடிசைகள் !

மரங்கள்தான்
உண்மையில் சிவன்கள்
நமக்கு
ஆக்ஸிஜன்
அமுதம் கிடைக்க
நச்சுக்காற்றை
புசிப்பதால்
மரங்கள்தான்
உண்மையில் சிவன்கள் !

உங்களுக்குத் தெரியுமா?

மரங்கள் மட்டுமே
பொதுவுடமையை
கடைபிடிக்கின்றன.

சூரியனை
பொதுவுடமையாக்கி
ஒளிச்சாப்பாட்டை
பகிர்ந்துண்பதால்
மரங்கள் மட்டுமே
பொதுவுடமையை
கடைபிடிக்கின்றன!

மரத்தகப்பன்கள்
இத்தனைப்
பூப்பெண்களைப்
பெற்றுவிட்டோமே
எனக் கவலைப்படுவதில்லை.

வண்டுகள் நம்
இளைஞர்களைப் போல்
வரதட்சணை
தண்டல்களில்
இறங்குவதில்லையே!

மரங்கள் மட்டுமே
பரம பக்தர்கள்
காலதேவனுக்கு
ஆண்டுக்கொருமுறை
மொட்டை அடித்து
கொள்கின்றனவே !

தண்ணீர்ப்பால்
கொடுத்த
தாய்ப்பாசம்
மறக்காதவை
மரங்கள் !
வெயில் காலத்தில்
நிலத்தாய்க்கு
நிழல் பந்தல் போடுகிறதே !

அதுசரி ...
அங்கே
மரப்பங்களாவில்
சருகு ஒட்டடை
அடிப்பது யார் ?

ஓ!
காற்றோ ?

- சுகன்

திங்கள், 20 டிசம்பர், 2010






வெல்வேன் - கவிதை - சொல்வேன் !


எனக்குள்ளே பாடங்கள் படித்தாள் ! உயிர்த்திரி
எரிந்திடவே காதலைத்தான் வடித்தாள் ! - என்றன்
கனவுகளை நினைவுகளைக் களவாடிச் சென்றவளோ
கரும்பு - மணக்கும் - அரும்பு !


முற்றாத நாற்றாக உருவம் ! - காதல்
மின்சாரம் உருவாக்கும் பருவம் ! - என்னுள்
அற்புதங்கள் விளைக்கின்ற சின்னவளின் புன்னகையோ
மின்னல் - உதட்டின் - பின்னல் !


மல்லிமுல்லை மணமடிக்கும் தேகம் ! - அதரம்
மதுவூறும் பூவினிதழ் பாகம் ! - வெள்ளை
அல்லிமலர் செண்டாக ஆடுகின்ற இளவஞ்சி
அணைப்பு - நெஞ்ச - பிணைப்பு


இடையசைவில் கவியெழுதிச் செல்வாள் ! - காதல்
இருஉயிரின் வேதமெனச் சொல்வாள் ! - உதட்டு
மடைதிறந்தே முத்தவெள்ளம் என்னிடத்தில் கொட்டென்றேன்
சினந்தாள் - பொய் - சினத்தால் !


ஓடிசியேன ஆடுகிற விழிகள் ! - கள்ளை
ஒழுகவிடும் மன்மதனின் வழிகள் ! - சொல்லை
வெடியாக வீசுகின்ற வாலிபத்தின் புயலவளை
வெல்வேன் - கவிதை - சொல்வேன் !


கணினியாய் கவிபாடும் மேனி ! - இதயக்
கற்பூரம் ஏற்றுகின்ற ஞானி ! - இளமைத்
தம்புராவில் சுதிஎழுப்பி மதிமயக்கும் குளிர்மகளால்
தவிப்பு - உயிரில் - தகிப்பு !


நான்பயிலும் கீர்த்தனையே வாநீ! - இரத்த
நாளத்தில் அசைகின்ற தோணி ! - இரவின்
தேன்கனவில் நடமாடி என்னுறக்கப் பூவுதிர்க்கும்
காவியம் - புனையா - ஓவியம் !

- சுகன்

வியாழன், 16 டிசம்பர், 2010



மார்கழி பூ

மார்கழி திங்களை அழகு செய்ய பல உண்டு. அதில் உன்னதமானது கோலம். அம்மா சுசிலா கோலம் போடுவதில் அபார ஞானம் உள்ளவர்கள்.

ஒரு சொர்கவாசல் திறப்புக்கு அம்மா போட்ட கோலம் புதுமையானது.

சொர்கவாசல் வைணவ தொடர்பானது.

அம்மா கோலத்தில் வைணவ குறியீடுகளோடு சிவ குறியீடுகளையும் சேர்த்து நல்லினக்க நோக்கோடு வாசலில் போட்ட கோலமிது.

படைப்புள்ளத்தின் இயல்பான கலகமும் இதில் வெளிப்படுகிறது. கண்ணார களியுங்கள்.
- சுகன்

சனி, 11 டிசம்பர், 2010

திராவகக்கவிஞன்


இழிவு கொண்ட
மனிதர்களை
எச்சரிக்கை
செய்யவே
எழுந்து நிற்கும்
மீசையை
முகவரியாய்
வைத்திருந்தான்
முண்டாசுக்கவிஞன்


பல
நூற்றாண்டுகள்
இருண்டுகிடந்த
தமிழ்க்கவிதை
உலகிற்கு
நவீன வெளிச்சம்
பாய்ச்சிய
மின்சாரக்கவிஞன்


தமிழ் எழுத்துகளை
பாரதி
கவிதையாய்
ஒருங்கினைத்த போது
அவை
ஆயுத மொழி பேசின


தமிழ்க்கவிதைக்கு
தீவிரவாதத்தை
கற்றுக்கொடுத்த
திராவகக்கவிஞன்
பிறந்த நாள்
11 -12 -
- சுகன்