Loading...

ஞாயிறு, 4 மே, 2014

பகுத்தறிவின் மூல காரணம்

இயற்கையை ஒட்டி உலகில் இயங்கும் பகுத்தறிவில்லாத உயிரினங்களிடம் இருக்கும் நேர்மை, ஒழுங்கு, கடமை உணர்வு, சுற்றுச்சூழலை தனது சுயநலத்திற்காக சுரண்டாத தன்மை, பஞ்சபூதங்களை கற்பழிக்காமல் காமத்தோடு அணுகி தம் தேவைக்கு மட்டும் துய்க்கிற அழகு, தேடல்... இவையெல்லாம் பகுத்தறிவு உள்ளதாக, அறிவியலின் பொற்காலம் என்று கூத்தாடிக் கொண்டிருக்கிற மனிதர்கள் என்று தங்களை சொல்லிக் கொண்டிருக்கிற அசிங்கங்களிடம் இல்லை என்பதுதான் இங்கு நிகழ்ந்து கொண்டிருக்கும் அனைத்து மனித வன்முறைகளுக்கும் மூல காரணம்.
(மார்ச் 2014, இதழ் எண் - 322 சௌந்தரசுகன் இதழ் தலையங்கத்திலிருந்து....)

ஞாயிறு, 20 ஜனவரி, 2013

திமிரெடுத்து
அலைபாய்கிற
விழிகளின் முன்
பிச்சைபாத்திரங்களாய்
என் விழிகள்

அவை 
ஓரிரு குறிப்புகளையாவது
என்னுள் எழுதக்கூடாதா?

ஓரமாய் மெல்லப் பதுங்கி

சிந்தி விடக்கூடாதா?
ஒரு

சின்னக் கசிவை

ஏக்கத்தை எழுதித்தள்ளும்
என் 
அப்பாவி பார்வைகளை
கவனிக்காதது போல்
கழிக்கிறாயா?
கவனத்துக்கே வரவில்லையா?

ஒரு

புரியாத புதிரைப்போல
புழங்கியாடுகிறது
உன் விழிமொழிகள்

பிரபஞ்ச இரகசியம்
புரிந்தா வாழ்கிறோம்

இயற்கையின் 
சூட்சமம் பயின்று தீருமோ?

அட...  டா...

என்ன விதமான விழிகள்
உன் விழிகள்.

                             - சுகன்

திங்கள், 5 மார்ச், 2012

மௌனத்தை 
எச்சமாக்கிவிட்டு
எரிந்து போனாய்
உரமாக்கி கொண்டதனால் - என்

உயிர் செழிக்கிறது
09-03-2012 வெள்ளி மாலை 6.30 மணி
அம்மாவீடு,
சி - 46 இரண்டாம்தெரு,
முனிசிபல்காலனி,
தஞ்சாவூர் - 613 007

அம்மா ஞா.சுசிலா நான்காமாண்டு நினைவுச் சாரல்

வரவேற்பு சு.இதழாளன்

தலைமை இலக்குமிகுமாரன்ஞானதிரவியம்

தடம் பதித்த தாய்மார்கள் - இரா.மீனாகுமாரி

தமிழ்அறிஞர்கள் பார்வையில் தாய்மை - மு.தாமரைச்செல்வன்

ஞாபகவெளியில் பறந்து - தெ.வெற்றிச்செல்வன்

                                                                                           அழைப்பில்
                                                                                                           .சுகன்

புதன், 11 ஜனவரி, 2012

தைம்முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு

கோலம் அம்மா
ஞா.சுசிலா
தைம்முதல் நாளே
தமிழ்ப்புத்தாண்டு

நித்திரையில் இருக்கும் தமிழா
சித்திரை யல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு
அண்டிப் பிழைக்க வந்த
ஆரியர் கூட்டம் காட்டியதே
அறிவுக் கொவ்வாத அறுபது ஆண்டுகள்
தரணி யாண்ட தமிழருக்கு
தைம்முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு
                                                                               - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்


      எத்தனைப் பாரதிதாசன்கள் வந்தால் என்ன? கவிதை முழங்கினால் என்ன? தமிழரின் தூக்கம், தமிழ்ச் சமூகத்தின் துக்கமாகவே இருக்கிறது. தமிழரின் அறிவியல் மூளை விளைவித்தவைகளின் சான்றாக இன்னும் அசைக்க முடியாமல் இருக்கிற ஆதாரங்கள் கொஞ்சமே, அழிந்துப் போனவை என்பதை விட, திட்டமிட்டு திருடப்பட்டவை, திருத்தப்பட்டவை, திசைமாற்றப்பட்டவை, அழிக்கப்பட்டவை என தமிழரின் தூக்கத்தால் தூர்ந்துப்போனவை ஏராளம்.


     இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே செம்மையாக அறிவியல் அணுகுமுறையோடு வாழ்ந்த ஒரு இனத்தின் இன்றைய சீரழிவும், இழிநிலையும், தரித்திரமும் வெட்கி தலைக்குனியும் படி இருக்கிறது. எனினும் நம்பிக்கை முற்றிலுமாய் சிதைந்து விடவில்லை. வெட்டுப்பட்ட இடங்களில் எல்லாம் துளிர்கள் துலங்கிக் கொண்டுதான் இருக்கும். அவற்றை வளர்த்தெடுக்க வைப்போம் சூரியப்பொங்கல்.


     தமிழ்ப்புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்கள்.
                                   - சுகன்.  

ஞாயிறு, 30 அக்டோபர், 2011

மூளைத் திருடி

மூளைத் திருடி


மூச்சிறைக்க
ஓடிவந்த
குழந்தைச் 
சொல்லியது...


"சார்... சார்...
இவன் 
மூளையைத் திருடி
எங்கப்பா வித்து
குடிச்சுப்பிடிச்சு சார்..."


படீரென
எதிர்பாராத
அதிர் வேட்டின்
தாக்குதல் போல்
ஆடிப் போனேன்...


குழந்தை சுட்டிய
இடத்தில்
மாற்றுத்திறன்
மழலையொன்று
உதட்டைப் பிரிக்காமல்
பூ போல மலர்ந்து
நின்றிருந்தது !
                                                                         - சுகன்.

சனி, 29 அக்டோபர், 2011

மனசின் குறுகுறுப்பு

மனசின் குறுகுறுப்பு


வீதி வெளியில்
புர்ண்டலையும்
மின்னல் !


சிதறும்
ஒளித்துணுக்குகளை
மண் துகள்கள்
ருசித்து சிதைத்தன !


இருள் விலகி நின்று
விக்கித்துப் போனது


நடு இரவின்
யாருமற்ற
அந்த வெளியின்
ஏகாந்த அழகை
இரசித்தபடி
அலைந்து கொண்டிருந்தது
தென்றல் !


கண்ணை மூடி
உள்வெளியில்
சலனமுற்று கிடக்கும்
மனசின் குறுகுறுப்பு
அடங்க மறுத்து
நிமிண்டியபடி


                                                                                 - சுகன்

சனி, 17 செப்டம்பர், 2011

எதார்த்தம் - கவிதை

எதார்த்தம்

மென்று
மென்று


உமிழ் நீர்
புரண்டு


அதிர்வுகளை
மட்டுப்படுத்த
நெகிழ்ந்து


ஒரு 
கட்டத்தில்
துப்பப்படுகிற
சூயிங்கம் மாதிரி
எல்லாமும்


- சுகன்