வெள்ளி, 31 டிசம்பர், 2010


மரங்கள்
பசுமைரசம்
ததும்பும்
மரக்கிண்ணங்கள்

வசந்தகாலம்
தேர்தல்காலமா?
மரச்சுவர் எங்கும்
அ.தி.மு.க. சின்னங்கள் !

மரங்கள்
ஏழைப்பறவைகளின்
குடிசைகள் !

மரங்கள்தான்
உண்மையில் சிவன்கள்
நமக்கு
ஆக்ஸிஜன்
அமுதம் கிடைக்க
நச்சுக்காற்றை
புசிப்பதால்
மரங்கள்தான்
உண்மையில் சிவன்கள் !

உங்களுக்குத் தெரியுமா?

மரங்கள் மட்டுமே
பொதுவுடமையை
கடைபிடிக்கின்றன.

சூரியனை
பொதுவுடமையாக்கி
ஒளிச்சாப்பாட்டை
பகிர்ந்துண்பதால்
மரங்கள் மட்டுமே
பொதுவுடமையை
கடைபிடிக்கின்றன!

மரத்தகப்பன்கள்
இத்தனைப்
பூப்பெண்களைப்
பெற்றுவிட்டோமே
எனக் கவலைப்படுவதில்லை.

வண்டுகள் நம்
இளைஞர்களைப் போல்
வரதட்சணை
தண்டல்களில்
இறங்குவதில்லையே!

மரங்கள் மட்டுமே
பரம பக்தர்கள்
காலதேவனுக்கு
ஆண்டுக்கொருமுறை
மொட்டை அடித்து
கொள்கின்றனவே !

தண்ணீர்ப்பால்
கொடுத்த
தாய்ப்பாசம்
மறக்காதவை
மரங்கள் !
வெயில் காலத்தில்
நிலத்தாய்க்கு
நிழல் பந்தல் போடுகிறதே !

அதுசரி ...
அங்கே
மரப்பங்களாவில்
சருகு ஒட்டடை
அடிப்பது யார் ?

ஓ!
காற்றோ ?

- சுகன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக