செவ்வாய், 7 டிசம்பர், 2010


சொப்பன நிமிஷங்கள்

அன்றைய
விடியல் சொப்பனத்தால்
வீங்கியிருந்தது
மனசு !

கண்நரம்புகளில்
கரைந்துப்போன
கனவுகளின்
துகள்கள்
இன்னும் ஓட்டிக்கொண்டு

மூளை வெளியில்
கனவுக் கன்னியின்
கால்சுவடுகள்
கனமாய்...

தூக்கத்தின்
அந்தரங்கக்
குகையில்
நிறம் புரியாத
சித்தன்னவாசல்
ஓவியங்கள்...
கலைந்தும்
கலையாமலுமாக
கனவின்
கைங்கரியத்தில் !

கனவுகள்
என்றாவது
கருப்பு வெள்ளையில்
வந்ததுண்டா?

வண்ணக்கலவையின்
சித்திரத்தொடர்
கனவுகள்...

தூக்கப் பத்திரிகையில்
திருப்பங்களுடன்
வெளிவருகிற
ஆழ்மன எழுத்தாளனின்
நாவல்கள் !

கனவின் மூலத்தை
விஞ்ஞானம் இன்னும்
விட்டு வைத்திருக்கிறது
விடுவிக்க முடியாத
விடுகதையைப் போல !

சில
கனவுக் கத்திகள்
சோம்பேறிகலாக்கி
வாழ்க்கைத்
தற்கொலைக்கு
வழிவகுத்துவிடும் !

கனவுகள்
நிரந்தரமானவை
அல்ல !
துளிநேர
சொர்க்கங்கள்

எல்லா கனவுகளும்
நிஜங்களின் பிரதிகள்
அல்ல...
பொய்களின்
பொழிப்புரையும் அல்ல !

கனவுகள்
மாயாபஜார் போல
நம்மை
மயக்கபுரியில்
மிதக்கவிடுபவை...

சொப்பன நிமிஷங்கள்
மனித மயக்கங்களின்
பொர்காலம்தான் !

இனம் புரியா
இனிப்புலகின்
கிளுகிளுப்புகள்தான்!

- சுகன்

4 கருத்துகள்:

  1. தூக்கப் பத்திரிகையில்
    திருப்பங்களுடன்
    வெளிவருகிற
    ஆழ்மன எழுத்தாளனின்
    நாவல்கள் !

    மதிப்பீடு அழகு!

    பதிலளிநீக்கு
  2. உங்க படம் நல்லா வந்திருக்கு சகோதரரே... எடுத்தது அண்ணியா... சுகலீலாவா?

    word verification - ஐ எடுத்தால் கருத்துரை இடுவோருக்கு வசதியாயிருக்கும்...

    பதிலளிநீக்கு
  3. அந்தப் படத்தை எடுத்தது உங்கள் ஊர்க்காரர் புகழ்பெற்ற நிழற் படக் கலைஞர் ந.செல்வன்.
    - சுகன்

    பதிலளிநீக்கு
  4. அப்படியா ... சந்தோசம்! நிழல் ஒளி விகிதாச்சாரம் நிபுணர் திறம் உணர்த்துகிறது... தெரிந்த பின் மறுபடி பார்க்கும்போது

    பதிலளிநீக்கு