செவ்வாய், 17 மே, 2011


கவலையின் விளிம்பில்

புத்தகங்கள்
வெளியிடப்படும் போதெல்லாம்
கவலை கொள்ளாமல் முடியவில்லை
காடுகள் அழிந்தல்லவா காகிதம்...

ஒவ்வொரு முறை 'புத்தகம்'
வெளியிடும் போதும்
ஒரு மரக்கன்று நட்டு
பரிகாரம் செய்யலாம் !

பூமி நடுங்கி எச்சரிக்கிறது
வீட்டைவிட்டு வெட்ட வெளியில்
கூட்டு வாழ்க்கை
எதிர்காலத்தில் நிகழலாம்

நிழலுக்கும் மறைப்புக்கும்
மரங்கள் அவசியமென
உணர்வது நல்லது !

கிராமங்கள்
அருகிக் கொண்டிருக்கின்றன
தவிர்க்க முடியாததாகிறது
பிளாஸ்டிக் பை !

இன்னும் சில ஆண்டுகளில்
நம் மூச்சுக்குழலுக்குள்
புழங்கக் காத்திருக்கும்
விசம் பற்றிய கவலையற்று
ஓடிக் கொண்டிருக்கிறோம்

எங்கெங்கும் பாலிதீன் கூச்சல்கள்
தேய்ந்து போகும்
நமது வாழ்வின் அர்த்த நாளங்கள்

பிணங்களைச் சுமக்கும்
ஒரு
பாலிதீன் பையாக
பூமி

மரங்களின் அவசியம் பற்றி
எழுதிக் கொண்டே
மரங்களைத் தின்கிறோம்...
இந்தக் கவிதையைப் போல !

செரிப்பதற்கு லாயக்கற்றதா
என்பதைப் பற்றி
யோசிக்காமலேயே
எல்லாம்
நடந்து விடுகிறது !

கவிதை, ஒளிப்படம் - சுகன்.

1 கருத்து:

  1. உண்மை சுகன். நிறைய வருத்தமுண்டு எனக்கு. ஒருமுறை என்னுடைய மகள் சொன்னாள் அறிவியல் விதிப்படி ஒரு மரத்தை வெட்டும்போது ஒரு மனிதனைக் கொன்றால் சூழ்நிலை சமப்பட்டுவிடும் என்று. அப்படியொரு நிகழ்வு இருந்தால் உண்மையில் மரங்கள் தப்பித்துவிடும். ஆனால் இதுகூடாது. அவரவர்க்கு உணர்வு வரவேண்டும். பிளாஸ்டிக் குறித்து கடுமையான அரசு ஆணை வரவேண்டும். இதெல்லாம் நடக்குமா என்ன? ஆனாலும் முடிந்தவரை நாம் தடுத்துக்கொள்ளலாம் பயன்பாட்டில் பயன்படுத்துவதை. அருமையான பதிவு சுகன்.

    பதிலளிநீக்கு