வெல்வேன் - கவிதை - சொல்வேன் !
எனக்குள்ளே பாடங்கள் படித்தாள் ! உயிர்த்திரி
எரிந்திடவே காதலைத்தான் வடித்தாள் ! - என்றன்
கனவுகளை நினைவுகளைக் களவாடிச் சென்றவளோ
கரும்பு - மணக்கும் - அரும்பு !
முற்றாத நாற்றாக உருவம் ! - காதல்
மின்சாரம் உருவாக்கும் பருவம் ! - என்னுள்
அற்புதங்கள் விளைக்கின்ற சின்னவளின் புன்னகையோ
மின்னல் - உதட்டின் - பின்னல் !
மல்லிமுல்லை மணமடிக்கும் தேகம் ! - அதரம்
மதுவூறும் பூவினிதழ் பாகம் ! - வெள்ளை
அல்லிமலர் செண்டாக ஆடுகின்ற இளவஞ்சி
அணைப்பு - நெஞ்ச - பிணைப்பு
இடையசைவில் கவியெழுதிச் செல்வாள் ! - காதல்
இருஉயிரின் வேதமெனச் சொல்வாள் ! - உதட்டு
மடைதிறந்தே முத்தவெள்ளம் என்னிடத்தில் கொட்டென்றேன்
சினந்தாள் - பொய் - சினத்தால் !
ஓடிசியேன ஆடுகிற விழிகள் ! - கள்ளை
ஒழுகவிடும் மன்மதனின் வழிகள் ! - சொல்லை
வெடியாக வீசுகின்ற வாலிபத்தின் புயலவளை
வெல்வேன் - கவிதை - சொல்வேன் !
கணினியாய் கவிபாடும் மேனி ! - இதயக்
கற்பூரம் ஏற்றுகின்ற ஞானி ! - இளமைத்
தம்புராவில் சுதிஎழுப்பி மதிமயக்கும் குளிர்மகளால்
தவிப்பு - உயிரில் - தகிப்பு !
நான்பயிலும் கீர்த்தனையே வாநீ! - இரத்த
நாளத்தில் அசைகின்ற தோணி ! - இரவின்
தேன்கனவில் நடமாடி என்னுறக்கப் பூவுதிர்க்கும்
காவியம் - புனையா - ஓவியம் !
- சுகன்
சுகமான சந்தம்.... அழகான கற்பனை....பாடிப் பார்க்கத் தூண்டும் அருமையான கவிதைப் பாடல்....
பதிலளிநீக்குகவியெழுதிச் செல்வாள் என்று தானே இருக்க வேண்டும்..? திருத்தி விடுங்களேன்... அது மட்டுமில்லை... அழகான தமிழ் அடுக்கடுக்காய் வருகையில் இடையில் எதற்கு "கம்ப்யூட்டர்"? அது ஏன் ஒரு "கற்கண்டு" கவியாக இருக்கக் கூடாது? சும்மா என் கருத்தைச் சொன்னேன்... கவிதை கவிஞரின் சொத்து.......
பதிலளிநீக்குசுகன் இப்போதுதான் முதல் வருகை. தொடர்ந்து வருவேன். அருமையாக இருக்கிறது. ஓர் ஓசை துள்ளுகிறது சொல்லடுக்கிலும் அதுதரும் சுவையான பொருள் வெளிப்பாட்டிலும். எழுதுங்கள் சுகன். இப்போதுதான் சுகனின் இன்னொரு பரிமாணத்தைப் பார்க்கிறேன்.
பதிலளிநீக்கு'ள்' திருத்தி விடுகிறேன். அது 1988 இல் எழுதிய மரபுப் பாடல். உயிரில் நடந்த உற்சவங்கள் கவிதை தொகுப்பில் அந்தக்கவிதை வந்திருக்கிறது. கருத்து உற்சாகப்படுத்துகிறது.
பதிலளிநீக்கு- சுகன்
ஹரணி அவர்களின் வருகை இனிக்கிறது. இது பழையதுதான். புதிதாய் இன்னும் செல்லவேண்டும். இதழ் வேலை என் படைப்பாற்றலைக் கட்டுப்படுத்துகிறது. உங்கள் வாக்கு எழுத தூண்டும் ஊற்று. நன்றி ஐயா !
பதிலளிநீக்கு- சுகன்