திங்கள், 6 டிசம்பர், 2010

சுகந்தமே

உனது பார்வை
விசிறியபோது
நான் உனது
விசிறியானேன் !


உன்னைப்
பார்த்தப் பின்புதானே
என் மன்மத சன்னல்கள்
திறந்து கொண்டன !


உனது இமைவிசிறி
அசையும் போதெல்லாம்
என்னுயிருக்குள்
புழுக்கங்கள் !


உனது
வாய் சோலைக்குள்
பற்களாய்
பவலமல்லிகைகளை
பதியம் போட்டது யார்?



எனது கைநார்கள்
கட்டுவதற்கே
சுகந்தம் வழிய
பூத்து வந்தாயோ
புதுமலரே !



உடல் கவர்ச்சியிலே
காதல் உடன்படிக்கை
போட்டவர்கள்
இல்லையே நாம் !


எண்ணப் பந்தல்களில்
மொட்டுவிட்டு
மனமெங்கும்
மல்லிகையாய்
மணந்ததல்லவா?
நம் காதல் !


எனது
கனவு அரங்கில்
உன்னைத்தவிர
வேறுபடங்களை
ஓடவிடுவதில்லை!


எனது சுகந்தமே
உனது முத்தங்கள்
என்ன எலக்ட்ரான்களா?
அவை என்னுள்
மின்னோட்டத்தை
உற்பத்தி செய்தபடி... .. .


இப்பொழுதெல்லாம்
நான்
அதிர்ந்து நடப்பதில்லை
ஏன் தெரியுமா?


நீ எங்கே
வியர்வையாய்
என்னிடமிருந்து
வெளியேறிவிடுவாயோ
என்கிற பயம்தான் !
- சுகன்

2 கருத்துகள்:

  1. உனது
    வாய் சோலைக்குள்
    பற்களாய்
    பவலமல்லிகைகளை
    பதியம் போட்டது யார்?


    வியக்க வைத்த பொருத்தமான உவமை...

    பதிலளிநீக்கு
  2. உவமையை இரசித்துப் பாராட்டிய உங்கள் கவிதைமனசுக்கு என் நன்றிகள். எழுத தூண்டும் உற்சாக வரிகள்.
    - சுகன்

    பதிலளிநீக்கு